4 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றார் மோடி: துணை அதிபர் கமலாவுடன் இன்று பேச்சு

புதுடெல்லி: குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வாஷிங்டனில் உலகளாவிய கொரோனா மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இன்றிரவு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் 76வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும், வாஷிங்டனில் நடக்க உள்ள குவாட் மாநாட்டிலும் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 4 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இப்பயணத்திற்கு முன்பாக பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறை பயணம் செல்ல உள்ளேன். இந்த பயணத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய கூட்டுறவு குறித்து பைடனுடன் ஆலோசிக்க உள்ளேன். மேலும், பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில் பரஸ்பர நலன்களுக்கான எங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உள்ளோம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பையும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குவாட் மாநாட்டில் அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோருடன் முதல் முறையாக நேரில் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த பயணம் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான நமது உறவை மேலும் பலப்படுத்தும் என்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் வாஷிங்டன் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசையும் சந்திக்க உள்ளார்.

* கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடிக்கு மட்டும் சலுகையா?

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைதளத்தில் நேற்று பலரும் சந்தேகம் கிளப்பினர். கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டவர்கள் மட்டுமே அமெரிக்காவில் தனிமைப்படுத்துதல் இல்லாமல் செல்ல முடியும். அதிலும், இந்தியாவை பொறுத்த வரை கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், பிரதமர் மோடி போட்டுள்ள உள்நாட்டின் கோவாக்சினுக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் தரவில்லை. அப்படி இருக்கையில் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பிரதமர் மோடி மட்டும் எப்படி அமெரிக்காவில் தனிமைப்படுத்துதல் இல்லாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்? உண்மையிலேயே அவர் கோவாக்சின் தடுப்பூசிதான் போட்டாரா? என பலர் சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளனர்.

Related Stories:

More
>