ராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள் தேர்தலில் சித்துவை தோற்கடிக்க போட்டி வேட்பாளர் நிறுத்துவேன்: அமரீந்தர் சிங் ஆவேச அறிவிப்பு

சண்டிகர்: ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை களம் இறக்குவேன்,’ என்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சூளுரைத்தார். பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவுக்கும் இடையிலான உள்கட்சி மோதல் வலுவடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்துவுக்கு நெருங்கிய அவரது ஆதரவாளர் சரண்ஜித் சிங் சன்னி முதல்வாரானார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது: வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு வேறு யாரையாவது முதல்வராக நியமித்து கொள்ளலாம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் கட்சித் தலைமை கேட்கவில்லை. இதனால் மிகவும் அவமானமடைந்து பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. நான் கூறியதை யாரும் கேட்காததால் காயப்பட்டேன். அதனால், இப்போது அதற்கு எதிராக போராடுவேன்.

எம்எல்ஏ.க்களை கோவாவுக்கு அழைத்து சென்றிருக்க கூடாது. எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள். அனுபவம் இல்லாததால் அவர்களுடன் இருக்கும் தலைவர்கள் அவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். சித்து போன்ற ஆபத்தானவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். மாநில தலைவரான அவருடைய தோல்வியை உறுதிப்படுத்த, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு எதிராக வலுவான போட்டியாளரை களம் இறக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: