×

போச்சம்பள்ளி அருகே சோகம் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை: சுடுகாட்டில் சடலங்கள் மீட்பு; போலீசார் விசாரணை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (50). இவருடைய மனைவி சாந்தாமணி (45). இவர்களுக்கு ரவீந்திரன் (27), சுரேந்திரன் (25) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் களில் ரவீந்திரன், ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார். சுரேந்திரன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரவீந்திரனுக்கு திருமணமாகவில்லை. சுரேந்திரனுக்கு திருமணமாகி அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். முருகேசனும் சாந்தாமணியும் கூலி தொழிலாளிகள். இவர்கள் இரண்டு பேரும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இதேபோல் நேற்று காலை முருகேசனும், சாந்தாமணியும் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். ஆனால் மாலை இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர். மேலும் உறவினர்கள் வீட்டுக்கு எதுவும் சென்றுள்ளனரா? எனவும் விசாரித்தனர். ஆனால் அங்கும் செல்லாதது தெரிய வந்தது. இதனிடையே நேற்று மாலை போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் இருவரையும் தேட முடியவில்லை. இந்த நிலையில், அதேபகுதியில் உள்ள சுடுகாட்டில் ஆண், பெண் சடலம் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு இன்று காலை தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

சடலங்களின் அருகே விஷ பாட்டில்கள் கிடந்ததால், இருவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர்கள் மாயமான முருகேசன், சாந்தாமணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் இருவரது சடலமும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கடன் பிரச்னை எதுவும் உள்ளதா? எதற்காக சுடுகாட்டுக்கு வந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரிக்கப்படுகிறது. கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Bochampalli ,Sudugat , Pochampally, husband, wife, suicide, police investigation
× RELATED ஹாரன் அடித்ததால் தகராறு பஸ் டிரைவர்,...