×

புதுவையில் இருந்து கடத்திவந்த ரூ.12 லட்சம் எரிசாராயம், லாரியுடன் பறிமுதல்: திண்டிவனம் அருகே மத்திய அமலாக்க குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மத்திய அமலாக்க குற்றப்பிரிவு போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 60 கேன்கள் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலுக்காக இது கடத்தப்பட்டதா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மதுபானங்கள், பணம், பரிசு பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனம் மரக்காணம் சாலையில் முருக்கேரி அருகே  நேற்று நள்ளிரவு மத்திய அமலாக்க குற்ற பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னர் லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 60 கேன்களில் எரிசாராயம் இருந்தது. இவற்றை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த திண்டிவனம் சீனுவாசபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனி மகன் சதீஷ் (27) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் கூறும்போது, இந்த எரிசாராயம் புதுவை மாநிலம் வில்லியனூரில் இருந்து கடத்தி வரப்படுவதாகவும், வில்லியனூர் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை எடுத்து வந்து திண்டிவனம் அருகே முருக்கேரி பெட்ரோல் பங்கில் விட்டு விடுமாறு எனக்கு தகவல்

வரும். முருக்கேரி பெட்ரோல் பங்க்கில் இருந்து மற்றொரு டிரைவர் வந்து லாரியை எடுத்தச்செல்வார். அதன்படி லாரியை எடுத்துச்சென்று முருக்கேரி வந்தபோது போலீசார் பிடித்து விட்டனர் என்றார். இந்த எரிசாராயம் திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளயைத்தைச் சேர்ந்த சாராயக்கடை அதிபருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. தினமும் புதுச்சேரி பகுதியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு எரிசாராயம் பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்தது. தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.

Tags : Laurie ,Federal Enforcement Crime Division ,Tindivanam , Puduvai, Erisarayam, Lorry, Seizure, Central Enforcement Crime Branch Police
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...