இருளில் வைகை அணை பூங்கா: மின்விளக்குகள் பொருத்தக் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் மின்விளக்குகள் இல்லாததால், மாலை 6 மணிக்கு மேல்  பூங்கா பகுதி முழுவதும் இருளாக காட்சியளிக்கிறது. பூங்காவில் உடனடியாக மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்த அணையின் அருகே பூங்கா உள்ளது. தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வைகை அணைக்கு வருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் அணைக்கு வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த அணையின் அருகே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வலதுகரை பூங்கா, இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி பூங்கா, யானை சறுக்கல், ஆங்காங்கே நீருற்றுகள், புல் தரைகள், உல்லாச ரயில், இசைநடன நீருற்று, படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.  கடந்த 5 மாத காலமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பூங்கா மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மின்விளக்குகள் இல்லாததால் பூங்கா இருளில் மூழ்கி கிடக்கிறது. பூங்காவில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் பழுதான நிலையில் உள்ளன. நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளன. பல இடங்களில் மின்விளக்குகளே பொருத்தப்படவில்லை. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உள்ள நிலையில், மாலை நேரத்தில் பூங்கா வெளிச்சம் இல்லாமல் காணப்படுகிறது. உடனடியாக பூங்காவில் போதிய மின் விளக்குகளை பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தற்போது மாவட்டத்தில் மழை பெய்வதால், மாலை 5.30 மணிக்கே பூங்காவில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை.

இதனால் சுற்றுலாப் பயணிகள் மாலை 5.30 மணிக்கே பூங்காவை விட்டு வெளியேறுகின்றனர். பரமரிப்பு இல்லாததாலும், மின்விளக்குகள் இல்லாததாலும் மாலை நேரத்தில் விஷப்பூச்சிகள் வருகின்றன. பகல் வெயில் 4 மணிக்கு மேல் குறையத் துவங்கும். இதனால் சுற்றுலாப் பயணிகள் மாலை 5 மணிக்கு மேல்தான் பூங்காவிற்கு வருகின்றனர். வெளிச்சம் இல்லாததால் அவர்கள் உடனே பூங்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வைகை அணை பூங்காவில் புதிய மின் விளக்குகளை பொருத்தவும், பழுதான மின் விளக்குகளை சரி செய்யவும் நடவடிக்கை வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

Related Stories:

More