×

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உள்நோயாளிகள் மீண்டும் அனுமதி: குழந்தையின்மைக்கு சிறப்பு சிகிச்சை

நாகர்கோவில்:  நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பஞ்ச கர்மா, குழந்தைகள் சிறப்பு பிரிவு, மூலம், சர்க்கரை, கண், காது, மூக்கு, தொண்டை, பெண்கள் சிறப்பு சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, பக்கவாதம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆங்கில முறையில் தீர்வு காணப்படாத சில நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், குமரி மாவட்டம் மட்டுமின்றி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து நோயாளிகள் வருகை தந்து வருகின்றனர். இதுதவிர கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வருகை தருகின்றனர்.

இங்கு புறநோயாளிகள் பிரிவில் தினசரி 500க்கும் மேல் நோயாளிகள் தற்போது வருகை தந்தாலும், சிலவகை நோய்களுக்கு 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குறை பிரசவம் காரமணமாக சற்று மூளை  வளர்ச்சி குறைந்த குழந்தைகள், ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள், போலியோவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு  3 ஆண்டுகள் வரை இங்கு 3 மாதங்கள் இடைவெளியில் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், கொரோனா வார்டாக ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாற்றப்பட்டதால், உள்நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்ேபாது கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தியதை அடுத்து, முதல் கட்டமாக அத்தியாவாசிய சிகிச்சை பெறுவோருக்காக 17 படுக்கைகள் முதல்தளத்தில் தொடங்கப்பட்டது.

தற்போது கூடுதல் நோயாளிகள் பயன்பெறும் வகையில் உள்நோயாளிகள் பிரிவை தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், 3வது அலையின் பாதிப்பு இல்லை என்பதால், உள்நோயாளிகள் பிரிவில் நோயாளிகளை அனுமதிக்க கலெக்டர் அரவிந்த் அனுமதி அளித்தார். இதனையடுத்து ஆயுர்வேத கல்லூரியில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி கூறியதாவது, ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் 100 படுக்கைகள் உள்ளன.

தற்போது கொரோனா வார்டு மூடப்பட்டதை அடுத்து, கலெக்டர் அரவிந்த் அனுமதியின் பேரில், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 80 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், மூலம் உள்ளிட்ட  6 சிறப்பு பிரிவுகள் உள்ளன. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போது சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல், பாலியல் மற்றும் ஆண்மை குறைவிற்கும் சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. மிகவும் செலவு மிகுந்த பஞ்ச கர்மா உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kottaru Government Ayurvedic Medical College , Kottaru, Government Ayurvedic Medical College, Inpatient, Infertility Specialist Treatment
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை