9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு: 7 முனை போட்டியால் சூடு பிடித்த தேர்தல் களம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தது. பதவிகளை பிடிக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. 7 முனை போட்டி நிலவுவதால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மனுக்களை வரும் 25ம்தேதி வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

 விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் செப்டம்பர் 15ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 22ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் என்றும் வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 மேலும், வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள செப்டம்பர் 25ம் தேதி கடைசி நாள் என்றும், வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 இடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுமார் ஒரு லட்சம் பேர் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று வரை 64,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று மாலையுடன்  வேட்பு மனுதாக்கல் நிறைவடையும் என்பதால் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர்களை முன்னணி கட்சிகள் வேகமாக அறிவித்தனர். இதனால் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நாளை இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்குசெலுத்தலாம் என்றும் அவர்களுக்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த தேர்தலில், திமுக கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.

தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் பாஜக உடன் இழுபறி நீடித்தாலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள்  வேட்பாளர்களை அறிவித்தனர்.

 இதை தொடர்ந்து, உள்ளாட்சி பதவிகளில் தங்களை வெற்றி பெற வைக்குமாறு அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் கிராமப்புறங்களில் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய பதவிகளை பிடிக்க அனைத்து கட்சி வேட்பாளர்கள் மத்தியிலும் கடும் போட்டி நிலவுகிறது.

 உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 12ம் தேதி எண்ணப்படுகிறது. அன்றே முடிவுகளும் வெளியாக உள்ளன. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் கிராமப்புறப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டி காணப்படுகிறது.

Related Stories:

>