×

‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு

புதுடெல்லி: ‘குவாட்’ மற்றும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் நாளை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீசை சந்திக்கிறார். வாஷிங்டனில் கொரோனா தடுப்பு மாநாடு, ஐ.நா பொது சபை கூட்டம், குவாட் தலைவர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை 11.20 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இன்று மாலை 6 மணியளவில் (அமெரிக்க நேரம்) அமெரிக்காவை பிரதமர் மோடி அடைவார்.

அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்  தோவல், ஒன்றிய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவும் செல்கின்றனர். தற்போது ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் நியூயார்க் வந்துள்ளனர். முன்னதாக வாஷிங்டனில் இன்றிரவு கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நடத்துகிறார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து, நாளை ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரபல தொழிலதிபர்களை மோடி சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அளிக்கும் விருந்தில் மோடி பங்கேற்கிறார். இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, முதன் முறையாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.

நாளை மறுதினம் (செப். 24) அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘குவாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, பிராந்திய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜோ பிடனும், மோடியும் அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக சந்திக்கின்றனர். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பருவநிலை மாறுபாடு, ஆப்கான் நிலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அதன்பின் வரும் 25ம் தேதி வாஷிங்டனில் இருந்து நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, ஐ.நா பொது சபை கூட்டத்தில் இந்திய நேரப்படி அன்று மாலை 6.30 மணிக்கு பேசுகிறார். அப்போது, கொரோனாவில் இருந்து மீள்வது, தீவிரவாதத்துக்கு எதிரான போர், பொருளாதார மீட்சி, பருவநிலை மாறுபாடு, மக்களின் அடிப்படை உரிமைகள், ஐ.நா. சபையை புதுப்பிப்பது ஆகிய கருத்துகளின் அடிப்படையில் மோடி பேசவுள்ளார். அதன்பின், அன்றைய தினமே புறப்பட்டு வரும் 26ம் தேதி டெல்லி திரும்புகிறார். முன்னதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஏற்கெனவே அமெரிக்காவில்  முகாமிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


மோடியின் 5 நாள் பயணத் திட்டம்
இன்று: டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
நாளை: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்கள், ஆப்பிள் தலைமை அதிகாரி சந்திப்பு.
நாளை மறுதினம்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் சந்திப்பு, ‘குவாட்’ கூட்டத்தில் பங்கேற்பு.
செப். 25: ஐ.நா பொதுச்சபையில் உரை.
செப். 26: புதுடெல்லி திரும்புகிறார்.

Tags : Quad' Conference ,UN ,PM Modi ,United States ,General Meeting ,Vice ,Chancellor ,Kamala Harrison , ‘Quad’ Conference, UN General Assembly, US, Prime Minister Modi, Vice President Kamala Harris
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து