×

தாத்தா இறந்துவிட்டதாக வரவழைத்து காதலித்து திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை?...ஆரணி போலீசில் மனைவி புகார்

ஊத்துக்கோட்டை: தாத்தா இறந்துவிட்டதாக வரவழைக்கப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரை உறவினர்கள் ஆணவ கொலை செய்திருக்கலாம் என்று காதல் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் அமுல் (26). இவர் நேற்றிரவு ஆரணி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; நான்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறேன். வேலைக்கு ரயிலில் செல்லும்போது அதே ரயிலில் வேலைக்கு சென்றுவந்த கும்மிடிப்பூண்டி தாலுகா காரணி பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் கவுதமன் (29) என்பவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது.

எங்களது திருமணத்துக்கு கவுதமனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2019ம் ஆண்டு சென்னை அடையாறில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டோம். இதன்பிறகு சென்னை தேனாம்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்துவந்தோம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கணவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவருவார். அந்த சமயத்தில், கணவரின் பெற்றோர், ‘’ நீ வேறு சாதியில் திருமணம் செய்துள்ளாய், எங்களுக்கு அவமானமாக உள்ளது. எனவே, அந்த பெண்ணை விட்டுவிட்டு வந்துவிடு நாங்கள் வேறு திருமணம் செய்து வைக்கிறோம்’’ என்று கூறுவதாக கணவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். இதனால் கணவர், தன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

கடந்த 2021ம் ஆண்டு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆவூர் கிராமத்தில் நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தோம். கடந்த 17ம் தேதி காலை 6 மணிக்கு எனது கணவருக்கு ஒரு போன் அழைப்புவந்தது.  அதில் பேசியவர்கள், ‘’ உன் தாத்தா இறந்துவிட்டார்’ என்று தெரிவித்தனர். இதன்பிறகு அந்த ஊருக்கு சென்ற என் கணவன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் கணவரை தேடிக்கொண்டு நானும் எனது தம்பியும் அவரது சொந்த ஊருக்கு சென்றபோது என் கணவர் படம் போட்டு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தோம். இதுபற்றி விசாரித்தபோது யாரும் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

என் கணவர் சாவில் மர்மம் உள்ளது. காதலித்து திருமணம் செய்ததால் கணவர் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். எனவே, போலீசார் விசாரணை நடத்தி, கணவர் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புகார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Tags : Arani police , Loved marriage, teenager, genocide, wife complains
× RELATED ஆரணி காவல் நிலையத்தில்...