×

மேச்சேரி பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூய்மை பணியை கலெக்டர் ஆய்வு

சேலம் : மேச்சேரி, வீரக்கல்புதூர் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூய்மை பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் வரும் 25ம் தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் கே.என்.நேரு, இப்பணியை ெதாடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளிலும் இந்த தூய்மைப்பணியில் 1,143 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 124 வாகனங்கள் மற்றும் 650 வகையான கருவிகளைக் கொண்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 33 பேரூராட்சிகளிலும் சுமார் 470 கி.மீ., நீளத்திற்கு இத்தூய்மைப்பணிகள் செய்ய திட்டமிப்பட்டு, இதுவரை சுமார் 168 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியில் 314 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 48 வகையான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு தூய்மைப்பணிகள் நடக்கிறது. இந்த 4 நகராட்சிகளிலும் சுமார் 95.33 கி.மீ., நீளத்திற்கு தூய்மைப்பணியை மேற்கொள்ள திட்டமிப்பட்டு, இதுவரை சுமார் 22.70 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

மேச்சேரி மற்றும் வீரக்கல்புதூர் பேரூராட்சியில் நடந்து வரும் பணியை கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மழைநீர் வடிகாலில் எவ்வித அடைப்பும் இன்றி, தண்ணீர் சென்றிட சுத்தமாக பணியை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கொளத்தூர் மாதிரிப்பள்ளியில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார். அங்கு, மாணவர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளிடம், வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், அதன் சுவை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், கொளத்தூரில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை கலெக்டர் குமார், மேட்டூர் நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாநகரில் 102 இடங்களில் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலம் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாமை நேற்று கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அவர், 28வது வார்டு லாரி மார்க்கெட் பின்புறம் செல்லும் ஓடையில் 800 மீட்டர் நீளத்திற்கு 2 ஜேசிபி மூலம் தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.

தொடர்ந்து, அஸ்தம்பட்டி 5வது வார்டில் ஏடிசி நகர் தரைபாலம் ஓடை, 9வது வார்டு சீலாவரி ஏரியில் பகுதி, அல்லிக்குட்டை ஏரி முதல் சீலாவரி ஏரி வரை சுமார் 1950 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணி ஆகியவற்றையும் கமிஷனர் பார்வையிட்டார். மாநகரில் 102 இடங்களில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடப்பதாகவும், இப்பணியில் கழிவுகள் அனைத்தையும் அப்புறப்படுத்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு கமிஷனர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.


Tags : Mecheri , Salem: Collector Karmegam inspected the rainwater drainage work in the Weerakkalputhur municipality area of Mecheri. Rural and urban
× RELATED புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி