ஒற்றுமையாக பணியாற்றினால் வேலைவாய்ப்பு பெருகும் மருத்துவ தலைநகரமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும்

* ஏற்றுமதியாளர் மாநாட்டினை தொடங்கி வைத்து கவர்னர் பேச்சு

காலாப்பட்டு :  புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் `வாணிஜ்ய உத்சவ்’ என்ற ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி, காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நேற்று நடந்தது. இந்திய ஏற்றுமதி அமைப்புகளின்  கூட்டமைப்பு, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம், இந்திய தொழில்  கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து புதுச்சேரி அரசு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்யாணசுந்தரம் எம்எல்ஏ., மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சய் சதா, புதுச்சேரி அரசின் தலைமை செயலர் அஸ்வனி குமார், சென்னை மண்டல வர்த்தகத்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் சண்முகசுந்தரம், தொழில் மற்றும் வணிக துறை செயலர் வல்லவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் அரசு அதிகாரிகள், தொழில் துறை வல்லுநர்கள், பல்வேறு தனியார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரிக்கு பல தொழில் நிறுவனங்கள் வர வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலைகள் பெருகி இருந்த புதுச்சேரியில், இப்போது குறைந்து காணப்படுகிறது. புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு எந்தவித காலதாமதமும் இல்லாமல் அனைத்து வகையான சிகிச்சைகளும், பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்ய வேண்டும் என்பது பற்றி முதல்வருடன் ஆலோசனை செய்தோம். தொழில் துறையிலும் இந்த வேகம் இருக்க வேண்டும். புதுச்சேரி குறித்து ஒரு தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்திருக்கிறோம். பிரதமரை அண்மையில் சந்தித்தபோது மிகுந்த அக்கறையோடு அத்தனை உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரமுடியும்.

புதுச்சேரியில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மருந்து தயாரிப்பு மட்டுமல்லாமல் ஒரு மருத்துவ தலைநகரமாகவும் புதுச்சேரியை மாற்ற வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். புதுச்சேரியை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒற்றுமையோடு பணியாற்றும்போது புதுச்சேரியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதில் என்னுடைய முயற்சி எப்போதும் இருக்கும். புதுச்சேரியில் கடந்தாண்டு ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இவ்வாறு கவர்னர் பேசினார். 

Related Stories:

More