பல்லடம் அருகே பாலீஸ் போட்டு தருவதாக கூறி மோசடி நகையுடன் தப்ப முயன்ற 2 பேர் கைது

பொங்கலூர் : பல்லடம் அருகே நகைக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.  பல்லடத்தை அடுத்த வலசுபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு  வடமாநிலத்தை சேர்ந்த டிப்டாப் ஆசாமிகள் இருவர் வந்தனர். அவர்கள் உஜாலா கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், தாங்கள் கொண்டு வந்துள்ள இந்த பவுடர் மூலம் பழைய நகைக்கு பாலீஷ் போட்டால் புது நகை போல் மாறிவிடும் என்று கூறியுள்ளனர்.

பவுடர் எதுவும் வேண்டாம் என தனபால் கூறிய போது பழைய நகை இருந்தால் எடுத்துட்டு வாங்க, உங்க கண் முன்னாடியே பாலிஸ் போட்டு தருகிறோம் என கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து தனபால் தனது 2 பவுன் தங்க செயினை கொடுத்துள்ளார். அவர்கள் அந்த பவுடரை வைத்து நகையை தேய்த்து சுத்தம் செய்தார்கள். பின்னர் குக்கரில் போட்டு கொஞ்சம் சூடு செய்தால் நகை புதிதாக மாறிவிடும் என்று கூறியுள்ளனர்.

குக்கரை வாங்கி சென்று உள்ளே வந்து பார்த்த போது நகை இல்லை. வெளியே வந்து பார்த்த போது இருவரும் பைக்கில் ஏறி தப்பி செல்ல முயன்றதை பார்த்து தனபால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கண்ட்லால் (33), மனிஷ்குமார் (33) என்பதம் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றதும் தெரிய வந்தது. மேலும் இது போன்று ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டிப்டாப் உடையணிந்து வீடுகளுக்கு சென்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இவர்களை போலீசார் தேடி வந்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 பவுன் நகை, பாலீஸ் போட பயன்படுத்திய பொருட்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>