மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் நியமிக்க கோரி நெலாகோட்டை மருத்துவ அலுவலகம் முன் ஆஷா பணியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

பந்தலூர் :  பந்தலூர் அருகே நெலாகோட்டை வட்டார மருத்துவ அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் அதிகமான ஆஷா பெண் பணியாளர்கள் நேற்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், அனுபவமிக்க தங்களை பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் நெலாகோட்டை வட்டார மருத்துவ அலுவலகம் முன் நேற்று திரண்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 12 வருடங்களாக குறைந்த சம்பளத்தில் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறோம். எனினும் கொரோனா பரவல் காலகட்டம் துவங்கி தற்போது வரை முழுநேர பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். குறைந்த ஊதியத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்காக களப் பணியாற்றி வருகிறோம்.

இந்த நிலையில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியில் ஈடுபடுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே பயிற்சி அளித்து எங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு வெளியிலிருந்து பணியாளர்களை புதிதாக  நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 12 வருடங்களாக ஆஷா பணியாளர்களாக இருந்து வரும் எங்களை மக்களைத் தேடி மருத்துவம் பணியில்  ஈடுபடுத்துவதற்கு பயிற்சியும் அளித்துள்ள நிலையில், தற்போது புதிய நபர்களை நியமிக்கும் பணிகள் நடைபெறுவது எங்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 இது குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்ட வந்தோம். ஆனால் அவர் ஊட்டி சென்றுள்ளதாக கூறப்படுவதால், அவரை நேரில் சந்திக்கும் வரை இங்கு காத்திருக்கிறோம் என, தெரிவித்தனர்.  அப்போது அங்கு வந்த போலீசார் கூட்டமாக நிற்பதை தவிர்த்து கலைந்து செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.  இந்நிலையில் ஷா பணியாளர்கள் சார்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஊட்டி தலைமை அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலு சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 பேச்சுவார்த்தையில் மக்களைத் தேடி மருத்துவம் பணிகளுக்கான பணி நியமனம் தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பணி நியமனம் நடைபெறும் என உறுதியளித்து, சங்க நிர்வாகிகளை மீண்டும் நாளை ஊட்டிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலகம் முன்பாக திரண்டு இருந்த ஆஷா பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>