×

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக மேலும் ஒரு கொலை?

திண்டுக்கல்: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியன் கொலைக்கு இன்ஃபார்மராக செயல்பட்ட நிர்மலாதேவி என்ற பெண் திண்டுக்கல் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தலையை பசுபதி பாண்டியன் வசித்து வந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்பு கொலையாளிகள் வைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அவருடைய வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நந்தவனப்பட்டியை சேர்ந்த 60 வயதான நிர்மலா. இவர் பசுபதி பாண்டியனின் நடவடிக்கைகளை கண்காணித்து சுபாஷ் பண்ணையார் தரப்பிற்கு தகவல் அளிக்கும் இன்ஃபார்மராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே இருக்கும் இ.பி காலனியில் வைத்து மர்மக்கும்பல் நிர்மலா தேவி தலையை துண்டித்து கொலை செய்துள்ளது. தலையை மட்டும் வெட்டி எடுத்து சென்ற கொலையாளிகள் பசுபதி பாண்டியன் வீட்டில் உள்ள படம் முன்பு வைத்துவிட்டு சென்றனர். அதிகாலையில் தகவலறிந்து சென்ற தாடிக்கொம்பு போலீசார் நிர்மலா தேவியின் உடல் மற்றும் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி சீனிவாசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Pashupati Pandian , Murder
× RELATED கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர்...