×

மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீரை வான் உறிஞ்சி மேகமாகும் அற்புத காட்சி

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடலில் தண்ணீர் வானில் உறிஞ்சப்படும் அரிய நிகழ்வை பொதுமக்கள் கண்டுகளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தென் கடற்பகுதியான, மன்னார் வளைகுடா கடலில் நேற்று காலை 11.06 மணியளவில் கடலில் கருமேகக் கூட்டங்களுக்கு நடுவே சுழல் காற்று சிறிது நேரம் தோன்றி வலுவிழந்து மறைந்தது. இதனால் கடலின் தண்ணீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறியது. இந்த அரிய நிகழ்வை பார்த்து அதிசயித்த அப்பகுதி மீனவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடல் மேற்பரப்பில் வீசும் காற்று குளிர் காற்றாகவும், கடற்காற்று சற்று வெப்பமாக இருந்தால், கடலில் இதுபோன்ற சுழல் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும். பருவநிலை மாற்றம் ஏற்படும்போது சுழல் ஏற்படும். மீண்டும் இரு காற்றின் வெப்பநிலையும் சமமாக மாறும்போது சுழல் மறைந்து விடும். இந்த அதிசய நிகழ்வின் போது கடலின் தண்ணீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். கடலில் அரிதாக நிகழும் இத்தகைய சுழல் நிகழ்வை கடலோரப் பகுதி மக்கள்,  மீனவர்கள், கடல் பயணம் மேற்கொள்வோர், வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு’’ என்றனர்.

Tags : Gulf region ,Mannar , Ramnathapuram,Mannar Valikuda, Rain water, Sea water
× RELATED பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது