×

இளையான்குடி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

*தொல்லியல் துறை அகழாய்வு நடத்த கோரிக்கை

இளையான்குடி :இளையான்குடி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது முனைவென்றி. இங்கு கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் மேற்பரப்பு களஆய்வு செய்தார். இதில் மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள், கருப்பு  சிவப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடுகள், கல் ஆயுதம், செங்கல்,  வட்டுச்சில், சிறிய மண்கலங்கள், தாங்கிகள், கருப்பு நிற கற்கள்,  எலும்புகள், பற்கள் போன்றவை கிடைத்துள்ளன. இவை 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என நம்பப்படுகிறது.

ராஜேந்திரன் கூறுகையில், ‘‘இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கொடுமணலுக்கு இணையான ஊர். இங்கு வயல் பகுதி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண்மாய் ஆகிய மூன்று பகுதியையும் சேர்த்துக் கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த தொல் சான்றுகள் கிடைக்கின்றன. முனைவென்றியில் கிடைத்திருக்கும் இச்சான்றுகளை ஆய்வு செய்தால் கீழடி ஆய்வு முடிவுகளை போல கிட்டத்தட்ட 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இங்கு தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Ilayankudi , Ilayankudi,Old Things, Archelogy
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை