×

தமிழ்நாட்டை போன்று மகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டு வரவேண்டும் : காங்கிரஸ் கோரிக்கை!!

மும்பை : தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது போன்று மகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், நீட் தேர்வை தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே எதிர்த்து வருவதை சுட்டிக் காட்டினார். நீட் தேர்வு குறித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்த பரிந்துரை அம்சங்களை குறிப்பிட்டு பேசிய அவர், நீட் அறிமுகம் செய்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் அதிகளவில் சேர்ந்ததாக குறிப்பிட்டார்.

நீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டதாக நானா பட்டோல் கூறினார்.அதே நிலை தான் மகாராஷ்டிராவில் இருப்பதாக கூறிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று உத்தவ் தாக்கரே அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.நீட் தேர்வு கேள்விதான் கசிவு, போலி நபர்களை கொண்டு தேர்வு எழுதுவது போன்ற பல குளறுபடிகள் நடப்பதாக நானா பட்டோல் கூறி உள்ளார்.மாநில பாடத் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டார். சிபிஎஸ்இ மாணவர்கள் எளிதாக நீட் தேர்வு தேர்ச்சி அடைவதால் மாணவர்கள் மத்தியில் சமத்துவம் அற்ற போக்கு காணப்படுவதாக நானா பட்டோல் தெரிவித்தார். இதனால் ஏழை மாணவர்கள் நலனை காக்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Tags : Maharashtra ,Tamil Nadu , நீட் தேர்வுநீட் தேர்வு,மகாராஷ்டிரா,காங்கிரஸ்
× RELATED வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு