அகழாய்வுத்தளங்களில் தொல்லியல் இயக்குனர், கலெக்டர் ஆய்வு கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்

திருப்புவனம் : கீழடி அகழாய்வு தளங்களை திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற தொல்லியல்துறை இயக்குனர் சிவானந்தம், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. மணலூரில் போதிய பொருட்கள் கிடைக்காததால் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. மற்ற தளங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மக்களின் வாழ்விடம், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை காண பலரும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். பொதுவாக அகழாய்வு பணிகள் நிறைவடைந்த உடன் குழிகள் மூடப்படுவது வழக்கம். ஆனால் அகழாய்வு குழிகளை காணும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். சட்டசபையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பொதுமக்களின் கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழிலும் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதனையடுத்து தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு தளங்களையும் நேற்று மதியம் நேரில் ஆய்வு செய்தனர். அகழாய்வு குழிகளுக்குள் பொதுமக்கள் இறங்கி பார்வையிடலாமா என உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அகரம், கொந்தகை ஆகிய இரு இடங்களும் அரசுக்கு சொந்தமானவை. எனவே சுற்றிலும் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பார்வையிட வசதி செய்து தரப்படும். கீழடி தளத்தின் உரிமையாளரிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன்பின் அங்கும் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

More