×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்க வாய்ப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 7 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தலையும் நடத்திவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடுபட்டு போயிருந்த 9 மாவட்டங்களுக்கான கிராமப்புற தேர்தலை மட்டும் தான் நடத்த தற்போது அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நடத்துவதற்கு தற்போது சூழல் இல்லை. 7 மாத கால அவகாசம் என்பது தற்போது தேர்தல் ஆணையத்தின் சார்பாக கேட்கப்பட்டது.

இந்த வழக்கு 2 தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வந்த போது ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது. உங்களால் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இதையெல்லாம் நடத்தும் போது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதை மட்டும் உங்களால் பின்பற்ற முடியாதா அதாவது உள்ளாட்சி தேர்தலை மட்டும் நடத்த முடியாதா என கடும் கோபமுடன் தலைமை நீதிபதி பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் மனுதாரர் சங்கர் என்பவர் தான் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் என்பது வழங்கப்படலாம், தவறில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இதனை அவர் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மனுதாரர் சங்கர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பிரமாணப் பத்திரத்தில் 528 பஞ்சாயத்துகள் இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை என்பது குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக நகர்ப்புற பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க தனக்கு ஆட்சேபனை இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை அடுத்து நிறைய புதிய நகர்ப்புற பஞ்சாயத்துகள் உருவாகி இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்க தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளார். இதனால் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் கோரியது போல் அவகாசம் வழங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சம் அடுத்த 5 மாதங்களில் மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது முழுமையாக நடைபெற்றுவிடும் என்று தெரிகிறது.

Tags : Supreme Court ,Electoral Commission , Urban local elections
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...