ஜெய்ஸ்வால், லோம்ரர் அதிரடி பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது ராயல்ஸ்

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. ராயல்ஸ் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 54 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. லூயிஸ் 36 ரன் (21 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் மயாங்க் வசம் பிடிபட்டார். கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேற, 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் - லிவிங்ஸ்டோன் 48 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டோன் 25 ரன், ஜெய்ஸ்வால் 49 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

5வது வீரராகக் களமிறங்கிய மஹிபால் லோம்ரர் சிக்சர்களாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்த ராஜஸ்தான் ஸ்கோர் எகிறியது. ரியான் பராக் 4 ரன்னில் வெளியேற, லோம்ரர் 17 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் மார்க்ரம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் திவாதியா 2, மோரிஸ் 5, சகாரியா 7, கார்த்திக் தியாகி 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். ராஜஸ்தான் 20 ஓவரில் 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 4 ஓவரில் 32 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

ஷமி 3, போரெல், பிரார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் 19 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மயாங்க் அதிகபட்சமாக 67 ரன் (43 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ராகுல் 49 ரன், நிகோலஸ் 32 ரன் எடுத்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 2 விக்கெட், சகாரியா, ராகுல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories:

More
>