வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நீலாங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை நீலாங்கரையில் கடந்த 2010 ஜூலை 4ம்தேதி 2 தனியார் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில், இரும்பு ராடால் தாக்கியதில் பீகாரை சேர்ந்த பங்கஜ்குமார் என்ற மாணவன் சம்பவ  இடத்திலேயே இறந்தான். இதுகுறித்து, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 30பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நீஷாந்த் என்பவரை, இதுவரை நீலாங்கரை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் போலீஸ்காரர் ஒருவர் ஆஜராகி, இன்ஸ்பெக்டர் இரவு ரோந்தில் இருந்ததால் ஆஜராகவில்லை என்றார். இதனால், கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை சென்னை மாநகர கமிஷனர் சங்கர்ஜிவால் நிறைவேற்றவேண்டும் என்றார்.

தொடர்ந்து, மாலையில், நீதிபதி முன்பு ஆஜரான இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், அனுபவம் இல்லாத போலீஸ்காரர் என்னைப்பற்றி தவறாக கூறிவிட்டார் என தெரிவித்தார். இதைகேட்ட நீதிபதி, நீதிமன்றத்திற்கு நீங்கள் அனுப்பிய போலீஸ்காரர் அனுபவம் இல்லாதவர் என நீங்களே கூறுகிறீர்கள். இதை தெரிந்தே நீங்கள் அனுப்பினீர்களா. காலையில் வராத நீங்கள் இப்போது எப்படி வந்தீர்கள். நான் உங்களுக்கு உத்தரவிடவில்லை. சென்னை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர் உங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார். நீங்கள் போகலாம் என்றார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More