மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த பணம், லேப்டாப் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் விஜிலென்ஸ் தீவிரம்

வேலூர்: மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேலூர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் போலீசார் ஒப்படைத்தனர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி 2016ம் ஆண்டு முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரின் சொத்து மதிப்பு 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் ஏலகிரிமலையில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் ஆகிய இடங்கள்  உட்பட மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது: கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.20 லட்சம் பணம், லேப்டாப், ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் போன்றவை வேலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு விஜிலென்ஸ் குழுவினர் பறிமுதல் செய்த சொத்து ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரித்துள்ளனர். இந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறோம். 551 யூனிட் மணல் பதுக்கியது தொடர்பாக கனிமவளத்துறை சார்பில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மணல் கடத்தல் தொடர்பான விசாரணையை மாவட்ட காவல் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: