தேவகோட்டை அருகே கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு விவசாயிகள் பெற்ற கடனைவிட கூடுதலான தொகை தள்ளுபடி

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே காலிக்குட்டையன் தெருவில் என்.என்.575 கிளாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. தலைவராக களத்தூர் ஊராட்சிமன்ற தலைவர்  பெரி.நாராயணன் உள்ளார். இவர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்போகி, கிளாமலை, மாணிக்கனேந்தல், சாத்தமங்கலம், கொடிக்காடு, களத்தூர், பாப்பாகுடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு 2021, ஜனவரி 31 வரை நிலுவையில் உள்ள பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. இதில் கிளாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2018-19, 2019-20, 2020-21ல் 299 விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் ரூ.8.28 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.1.94 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி பட்டியலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் சிலர் பெயரில் பெற்ற கடனை விட, கூடுதலான தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, சங்க துணைத் தலைவர் உ.நாராயணன் தலைமையில் விவசாயிகள் நேற்று சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.

துணைத்தலைவர் உ.நாராயணன் கூறுகையில், ‘‘தலைவராக உள்ள அதிமுக பஞ்சாயத்து  தலைவர் பெரி.நாராயணனும், செயலாளர் முருகேசனும் முறைகேடு செய்து  வருகின்றனர். நாராயணன் பஞ்சாயத்து கணக்குகளில் முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர் செக் வழங்கும் பவரை கலெக்டர் மதுசூதன் ரெட்டி  நிறுத்தி வைத்து நடவடிக்கை  எடுத்துள்ளார். அதேபோல் முருகேசன் 20 வருடமாக ஒரே சொசைட்டியில் இருந்து கொண்டு முறைகேடுகளை அரங்கேற்றி  வருகிறார். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். விவசாயி கருப்பையா  கூறுகையில், ‘‘எனது மனைவியின் பெயரில் கடன் வழங்கி  அவருக்கு தெரியாமலேயே பணத்தை கையாடல் செய்துள்ளனர்’’ என்று  தெரிவித்தார். இதுகுறித்து சங்க தலைவர் பெரி.நாராயணன் கூறுகையில், ‘‘முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. என் மீது பகை உணர்வில் பொய் புகார் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.

Related Stories: