ஏடிஎம் இயந்திரங்கள் உடைப்பு: போதை ஆசாமி போலீசில் சரண்

ஆவடி: திருநின்றவூர் பிரகாஷ் நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சேஷாத்ரி(50), ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். கடந்த சில வருடங்களாக சரிவர வியாபாரம் நடைபெறாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து குடிபோதைக்கு அடிமையான சேஷாத்ரி, தினமும் போதையில் வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் பிரகாஷ் நகர் மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள 3 ஏடிஎம்மில் புகுந்து தான் வைத்திருந்த சுத்தியலால் ஏடிஎம் மெஷினின் டிஸ்பிளேயை உடைத்து நொறுக்கினார். அத்துடன் ஆத்திரம் தீராமல் திருநின்றவூர் சிடிஎச் சாலைக்கு வந்து அங்குள்ள வங்கி ஏடிஎம் உள்பட 3 ஏடிஎம்மிலும் டிஸ்பிளேயை அடித்து நொறுக்கிவிட்டார்.

இதையடுத்து, நேராக திருநின்றவூர் காவல்நிலையத்தில் சரணடைந்து, நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அங்கிருந்த போலீசாரிடம், ‘நான் மன உளைச்சல் காரணமாக ஏடிஎம்மை உடைத்துவிட்டேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னை சிறையில் அடைத்து விடுங்கள்’ என்று போதையில் கதறி அழுது கெஞ்சியுள்ளார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், போலீசார் சென்று உடைக்கப்பட்ட ஏடிஎம் மையங்களை ஆய்வு செய்தனர். அப்போது 6 ஏடிஎம் மெஷின்களிலும் டிஸ்பிளே உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்படி, போலீசார் சேஷாத்ரியை நேற்று கைது செய்தனர்.

Related Stories:

More
>