×

தனித்து ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது கனடாவில் மீண்டும் ஏமாந்தார் டிருடேவ்: நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை

டொரன்டோ: கனடாவில் பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடக்கும். கடந்த 2015 தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த டிருடேவுக்கு 2019 தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். இதனால், அரசின் ஒவ்வொரு முடிவுக்கும் கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். அதை அவர் விரும்பவில்லை. இந்நிலையில், கொரோனா பேரிடரை சிறப்பாக கையாண்டதால்  டிருடேவுக்கு மக்களிடம் மவுசு கூடி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ள அவர் திட்டமிட்டார். தனது பதவிக்காலம் முடிய 2 ஆண்டுகள் இருந்த போதிலும் முன்கூட்டியே தேர்தல் நடத்தி பெரும்பான்மை வெற்றியை பெற முடிவு செய்தார். அதன்படி, கனடா நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில், மொத்தமுள்ள 338 தொகுதிகளில் டிருடேவின் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலை விட ஒரு இடத்தை மட்டுமே அதிகமாக வென்றுள்ள லிபரல் கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான 170 இடங்களை பிடிக்கத் தவறியது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் 121 இடங்களிலும், இந்திய வம்சாவளி ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரேட்ஸ் கட்சி 27 இடத்திலும், க்யூபிகாய்ஸ் கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடப்பதால் இறுதி நிலவரம் முடிவாக ஓரிரு நாட்களாகும். எனினும், தனித்து ஆட்சியை பிடிக்கும் டிருடேவின் கனவு தகர்ந்துள்ளது.

* சீக்கியர்கள் ஆதிக்கம்
கனடா தேர்தலில் இம்முறை 49 இந்திய வம்சாவளிகள் போட்டியிட்டனர். இதில் 17 பேர் சீக்கியர்கள். இவர்களில் 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் வான்கூவர் தெற்கு தொகுதியிலும், அமைச்சர்கள் பர்திஸ் வாட்டர்லூ, அனிதா ஆனந்த் ஓக்வில்லா தொகுதியிலும் வென்றுள்ளனர். நியூ டெமக்ரேட்ஸ் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் பர்னபி தொகுதியில் வென்றார்.

Tags : Canada , Trudeau's dream of self-government collapsed in Canada
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்