×

இந்தியர்களுக்கு மட்டும் பாரபட்சம் 2 டோஸ் போட்டாலும் கூட 10 நாள் தனிமை கட்டாயம்: இங்கிலாந்துக்கு இந்தியா எதிர்ப்பு

நியூயார்க்: இங்கிலாந்து அறிவித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளில் இந்தியர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரிடம் இந்தியா வேதனை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரசு அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து வருபவர்கள் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள்  தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் 10 நாட்கள் சுயதனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தனிமைப்படுத்துதல் இன்றி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்தியர்கள் அந்த பட்டியலில் இல்லை. இந்த புதிய கட்டுப்பாடுகள் அக்டோபர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இந்த நடவடிக்கையால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்நிலையில், நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் எலிசபெத் டிரசை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியர்களை தனிமைப்படுத்தும் பாரபட்சமான விதிமுறை குறித்து கவலை தெரிவித்தார். மேலும், இரு நாட்டின் பரஸ்பர நலனில் அக்கறை கொண்டு, புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளில் மாற்றம் செய்து பிரச்னைக்கு தீர்வு காணும்படியும் கேட்டுக் கொண்டார்.

Tags : Indians ,India ,UK , 10 days of solitary confinement even if 2 doses of discrimination are imposed on Indians only: India opposes the UK
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது