×

ஸ்ரீவாரி சேவை தன்னார்வலர்களுக்கு அழைப்பு.! திருப்பதியில் அக். 7ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்: தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 7ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குவதாக தலைமை செயல் அதிகாரி ஜவகர் தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் தொடர்பாக தலைமை செயல் அதிகாரி ஜவகர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: இந்த ஆண்டு வருடாந்திர பிரமோற்சவம் அக்டோபர் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை  9 நாட்கள் நடைபெறும். பிரமோற்சவத்திற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

அலிபிரி நடைபாதையை பக்தர்களுக்கு பிரமோற்சவத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  புனரமைப்பு பணிகள் முடிந்த ஓய்வறைகள்  பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாகன சேவைகள் நடைபெறும் கோயிலுக்குள்  மண்டபத்தில்  ஒரு சிறிய பிரம்ம ரதம் அமைக்க வேண்டும். வாகனங்கள்  நிறுத்த பார்க்கிங் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தரிசனம், லட்டு பிரசாதம் மற்றும் அன்ன பிரசாதம் கிடைப்பதில் எந்த சிரமமும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை அன்னபிரசாத பவனில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அக்.15ல் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘வரும் 5ம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம், 6ம் தேதி அங்குரார்பணம், 7ம் தேதி கொடியேற்றம்,  11ம் தேதி கருட சேவை, 12ம் தேதி தங்க ரதத்திற்கு பதில்(சர்வபூபால வாகனம்), 14ம் தேதி ரத உற்சவத்திற்கு மாற்றாக (தேர்,சர்வபூபால வாகனம்) 15ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறும். மாநில முதல்வர் ஜெகன்மோகன் இந்தாண்டு பிரமோற்சவத்திற்கு அழைக்கப்படுவார்,’’ என்றனர்.

Tags : Sreevari ,Tirupati ,Pramorsavam , Call for Sreevari Service Volunteers in Tirupati Oct. Pramorsavam starts on the 7th: Chief Executive Officer Information
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...