×

தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ரூ.5,231 கோடியை வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் சக்கரபாணி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,231 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி  ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலிடம், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி உள்ளார். தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேற்று டெல்லி ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,231 கோடியை விடுவிக்கும்படி ஒன்றிய அமைச்சரிடம் மனு வழங்கினேன். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து அவற்றை தனியார் அறவை நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுப்புகிறது. இதற்காக, கடந்த 2005ம் ஆண்டு முதல் பச்சரிசி குவிண்டல் ஒன்றுக்கு  ரூ.5ம், புழுங்கல் அரிசிக்கு குவிண்டல் ஒன்றுக்கு ரூ.10ம் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.

இதை முறையே ரூ.60ம், ரூ.100ம் உயர்த்தி வழங்கும்படி அவரிடம் கோரினேன். மேலும், வெளிசந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒரு கிலோ அரிசியை ரூ.20க்கு ஒன்றிய அரசு உணவு கழகத்திடம் இருந்து வாங்குகிறது. அதனை ரூ.15 என குறைக்கும்படி கேட்டுக் கொண்டேன். கடந்த 2007ம் ஆண்டு முதல் கலைஞர் சிறப்பு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வெளிசந்தையில் இருந்து வாங்குவதை விட,  குறைந்த விலைக்கு தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு குறைந்த விலையில் துவரம் பருப்பை வழங்கும்படியும் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உடனிருந்தார்.

Tags : Tamil Nadu ,Chakrabarty ,Union Minister , Rs 5,231 crore due to Tamil Nadu: Chakrabarty urges Union Minister
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல...