×

அதானி துறைமுகத்தில் 3 கன்டெய்னர்களில் இருந்து ரூ.21,000 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்: சென்னை தம்பதி அதிரடி கைது

அகமதாபாத்: ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் எடையுள்ள, ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை குஜராத்தில் அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டெல்லியில் வசிக்கும் சென்னை தம்பதியை வருவாய் இயக்குனரக உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள கந்தகார் நகரில் செயல்பட்டு வரும் ‘ஹசன் ஹூசைன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின்3  கன்டெய்னர்கள், ஆந்திர மாநிலம், விஜயவாடா, சத்தியநாரயணபுரத்தில் உள்ள, ‘ஆஷி டிரேடிங் நிறுவனம்’ என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டது. ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து இந்த கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இவற்றில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இந்தியபோதைப்பொருள் தடுப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, நடவடிக்கையில் இறங்கினர். வருவாய் இயக்குனரக உளவுத்துறை அதிகாரிகளுடன் குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முத்ரா துறைமுகத்துக்கு சென்றனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 கன்டெய்னர்களிலும் சோதனை செய்தனர். அதில்,  முகத்துக்கு பயன்படுத்தும் டால்கம் பவுடர் டப்பாக்கள் இருந்தன. அவற்றை உடைத்து பார்த்த போது, ஹெராயின் போதை பவுடர் இருந்தது. 3 கன்டெய்னர்களிலும் இருந்தும் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் இதன் ஒரு கிலோ விலை ரூ.7 கோடி. அதன்படி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 3 டன் எடை ஹெராயினின் மொத்த மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வருவாய் இயக்குனரக உளவுத்துறை அதிகாரிகள், விஜயவாடாவில் உள்ள ‘ஆஷி டிரேடிங் கம்பெனி’ மற்றும் அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மண்ட்வி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ‘ஆஷி டிரேடிங்’ நிறுவனத்தின் உரிமையாளர்களான சுதாகர், அவரது மனைவி துர்கா வைசாலியை சென்னையில் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.  இவர்களை நேற்று பூஜ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், இந்த கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டை  சேர்ந்தவர்களுக்கு தொடர்பு  இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து வருவாய் இயக்குனரக உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில், இந்தியாவை சேர்ந்த மேலம் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Adani ,Chennai , Rs 21,000 crore worth of heroin seized from 3 containers at Adani port: Chennai couple arrested
× RELATED அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன