×

வன பகுதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அரசு தொடர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:   சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடலூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி ரிசார்ட் கட்டி வருகிறார். அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளார். வனப்பாதையையும் விரிவுபடுத்தியுள்ளார். விதிகளுக்கு முரணாக நடைபெறும் இந்த வன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.  

இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள்,  தமிழகத்தில் 16 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு ஆக்கிரமிப்பில் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம். எனவே, வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றும் நடவடிக்கையை தொடர வேண்டும்  என்று வழக்கை முடித்துவைத்தனர்.

Tags : ICC , Government should continue to clear forest encroachment: ICC order
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...