×

குவாரி உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் இயங்கும் சட்டவிரோத கல் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு  உத்தரவிடக் கோரி பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத குவாரிகள் குறித்த அறிக்கையை அரசு பிளீடர் பி.முத்துக்குமார் தாக்கல் செய்தார். அப்போது, மனுதாரர் ஆஜராகி, அரசு அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சட்டவிரோத குவாரிகள் நடத்துபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 379 திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத குவாரிகளால் ரூ. 100 கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘சம்பந்தப்பட இடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டபின்  உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் வருங்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத குவாரிகள் நடைபெறாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கைகளை எடுத்து அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’  என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : ICC , Compensation from quarry owners: ICC order to the state
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது