தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7.1 டன் ரேசன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது; 2 வேன்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7.1 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டவுன் டிஎஸ்பி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தனிப்படையினரான ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், திருமணி, செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் ஆகியோர் சிலுவைப்பட்டி பகுதியில் ஒரு குடோனுக்கு சென்றனர்.

அங்கு 2 டெம்போ டிராவலர் வேன்களில் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசைக் கண்டதும் அவர்கள் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். விசாரணையில் அவர் தூத்துக்குடி, சிலுவைப்பட்டி, கணபதி நகரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் தமிழ்மணி (33) என்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமான 2 வேன்களில் தூத்துக்குடியில் பல்வேறு ரேசன் கடைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தலா 50 கிலோ கொண்ட 142 மூடைகளை ஏற்றி கேரளாவுக்கு கடத்த இருந்தது ெதரியவந்தது.

இதன் மொத்த எடை 7.1 டன் ஆகும். ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவனான தமிழ்மணியை போலீசார் கைது செய்தனர். 142 ரேஷன் அரிசி மூடைகளையும், வேன்களையும், தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>