×

உள்ளாட்சித் தேர்தலுக்காக 24 மணி நேரமும் கண்காணிக்க உடனடியாக பறக்கும் படையை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!!

சென்னை  : ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 24 மணி நேரமும் கண்காணிக்க உடனடியாக பறக்கும் படையை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. ஒன்று அல்லது 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படை என்ற வீதத்தில் பறக்கும் படைக்கு ஓர் செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் 2 அல்லது 3 காவல்துறை காவலர் கொண்ட பறக்கும் படை அமைத்தல் வேண்டும்.

இப்பறக்கும் படைகள் மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளவரை 24 மணி நேரமும் இயக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்குகின்ற வகையில், 8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுப்பணி என்று இயங்கக்கூடிய வகையில் தேவைக்கேற்ப மாவட்டங்களில் பறக்கும் படைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது ஆட்சியாளர்கள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற மாதிரி நடத்தை விதி கண்டிப்பாக அமலில் உள்ளதை பறக்கும் படைகள் உறுதி செய்தல் வேண்டும்.

மாதிரி நடத்தை விதி மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல், மிரட்டுதல், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் அதிக அளவில் பணம் இலஞ்சமாக வழங்குதல் தொடர்பான புகார்களின் மீது முழு கவனம் செலுத்துவது பறக்கும் படைகளின் கடமையாகும்.

வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை வாகனத்தில் எடுத்து சென்றாலோ, ரூ.10,000 மேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள் அல்லது தேர்தல் பொருட்கள் அல்லது போதைப் பொருட்கள் அல்லது மது, ஆயுதங்கள் அல்லது அன்பளிப்பு பொருள் அவற்றினை பறக்கும் படைகள் ஆய்வின் போது பறிமுதல் செய்தல் வேண்டும், பறக்கும் படைகளின் ஆய்வு மற்றும் பறிமுதல் செய்யும் அனைத்து நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ குழுவினால் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் பணங்கள் முழுவதும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்திற்கு பின்பும் விடுமுறை நாட்களிலும் கருவூலத்தில் செலுத்துவதற்கு கருவூல அலுவலகத்திற்கு மாவட்டதேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியாளர்களால் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


Tags : Electoral Commission , தேர்தல் ஆணையம்
× RELATED தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும்...