போலீசார் தாக்கியதில் கைதி மரணம்; போலீஸ்காரரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: போலீசார் தாக்கியதில் விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் பரமக்குடி போலீஸ்காரரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது. பரமக்குடி டவுன் போலீசார் கடந்த 2010ம் ஆண்டின் குற்றவழக்கிற்காக வெங்கடேசன் என்பவரை கடந்த 3.10.2012ல் கைது செய்தனர். அப்போது வெங்கடேசன் போலீசாரை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பித்தார். வெங்கடேசனை எமனேஸ்வரம் பகுதியில் ேபாலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது வெங்கடேசனை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நள்ளிரவில் வெங்கடேசன் இறந்தார். மாஜிஸ்திரேட் துவக்க விசாரணை நடத்திய நிலையில், கைதி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த கொலை வழக்கில் 3வது குற்றவாளியான  ஏட்டு கிருஷ்ணவேலு தனக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில், நடந்த சம்பவத்திற்கு மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த காவல் நிலையத்தில் பணியாற்றினார். வேறொருவரின் வாக்குமூலம் அடிப்படையில் மனுதாரரை வழக்கில் சேர்த்துள்ளனர். இது தவறானது என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டவர் போலீசார் தாக்கியதில் இறந்துள்ளார். மனுதாரரும் தாக்கியதாக வழக்கு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான நிலையில் 3வது முறையாக மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகியும் வழக்கின் விசாரணை முடியாமல் நிலுவையில் இருப்பது துரதிஷ்டமானது. இந்த வழக்கின் விசாரணையை 2 மாதத்தில் முடிக்க வேண்டுமென கடந்த ஜூலை 7ல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலமும் முடிந்து விட்டது. எனவே, இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>