×

புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டி: மேலிட மிரட்டலுக்கு பணிந்தார் ரங்கசாமி?

புதுச்சேரி: புதுச்சேரியில்  பாஜக மேலிட நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குபின் ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. பாஜ மேலிட மிரட்டலுக்கு அவர் பணிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாஜக வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதால் அடுத்தகட்ட பரபரப்பு எழுந்துள்ளது. புதுச்சேரியில் ராஜ்யசபா எம்பியாக இருந்த அதிமுக கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வருகிற 6ம்தேதியுடன் முடிவடைகிறது.

இதையொட்டி வருகிற 4ம்தேதி ராஜ்யசபா எம்பி தேர்தல் புதுச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளையுடன் (22ம்தேதி) முடிவடைகிறது. இப்பதவியை பெற தேஜ கூட்டணி கட்சிகளான என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே பாஜக மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி இத்தேர்தலில் பாஜக போட்டியிட தீர்மானித்தது. இதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொள்ளாத நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாமிட்டு காய்நகர்த்தினார்.

இவ்விவகாரத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்தன. மும்முனை போட்டி உருவானால் திமுகவுக்கு சாதகமான நிலை ஏற்படும் சூழல் நிலவியது. இதற்கிடையே முதல்வர் ரங்கசாமி, நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்துவிட்டு திரும்பினார். அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ரங்கசாமியை பாஜக மேலிட நிர்வாகிகள் சிலர் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், பாஜகவுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க முதல்வருடன் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பாஜ மேலிடம் அவரை மிரட்டி பணிய வைத்ததாக கூறப்படுகிறது. இது என்ஆர் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அக்கட்சி எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி நேற்றிரவு தனியார் ஓட்டலுக்கு அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அவர்களிடம் ராஜ்யசபா எம்பி தேர்தல் விவகாரம் குறித்து கருத்து கேட்டறிந்தார். அப்போது ராஜ்யசபா சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் கொந்தளித்ததாக தெரிகிறது.

இதில், பங்கேற்ற 3 சுயேச்சை  எம்எல்ஏக்களும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும் என்று தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். அடுத்ததாக முதல்வர் பதவியையும் பாஜக குறிவைக்கும் என ரங்கசாமியை எச்சரித்துள்ளனர். ராஜ்யசபா எம்.பி. சீட்டை பாஜவுக்கு ஒதுக்கவில்லை என்றால் ரங்கசாமி ஆட்சிக்கு அவர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரங்கசாமி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் தேஜ கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பிக்கு பாஜக போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் வேட்பாளர் யார்? என்பது இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வில்லியனூர் ஜெயக்குமார், திருநள்ளாறு வாசு உள்ளிட்ட சிலர் சீட் கேட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாஜக வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில், இவ்விவகாரத்தில் என்ஆர் காங்கிரசில் எம்எல்ஏக்களிடையே அதிருப்தி நிலவும் பட்சத்தில் பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக சில எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.



Tags : BJA ,Vavuachcheri Rajayasaba elections ,Rangasami , BJP contest in Pondicherry Rajya Sabha polls: Did Rangasamy succumb to top threats?
× RELATED புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட...