‘சிறப்பான ஆட்டத்தை தொடர வேண்டும்’- இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி முரே விருப்பம்

மெட்ஸ்: ‘சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக ஆடி, இந்த ஆண்டை நிறைவு செய்ய வேண்டும்’’ என்று இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி முரே தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆண்டி முரே, காயம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. குணமடைந்த பின்னர் டென்னிஸ் உலகிற்கு திரும்பிய அவர், கடந்த மாதம் நடந்த யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பங்கேற்றார்.

அதில் முதல் சுற்றில் ஏடிபி தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசிடம், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 5 செட்களில் தோல்வியடைந்தார். இருப்பினும் அன்று அவரது ஆட்டத்திறன், மிகச் சிறப்பாக இருந்தது. அதனால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளினார். தற்போது மெட்ஸ் நகரில் (பிரான்ஸ்) நடைபெறும் மோசெல் ஓபன் டென்னிஸில் ஆண்டி முரே, பங்கேற்றுள்ளார். தனது முதல் சுற்றில், பிரான்சின் உகோ ஹம்பர்ட்டுன் மோதுகிறார்.

இப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆண்டி முரே, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘யு.எஸ். ஓபனில் முதல் சுற்றில் நான் தோல்வியடைந்தாலும், அன்று எனது ஆட்டம் எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது என்பதுதான் உண்மை. சர்வதேசத் தரத்திலான ஆட்டத்திறன் என்னிடம் இன்னும் இருக்கிறது. அதை தொடர வேண்டும். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த ஆண்டை நிறைவு செய்ய வேண்டும்.

பயிற்சிக்கு தேவையான அவகாசம் என்னிடம் இல்லை. ஆனால் அதுதான் சவால். அடுத்த 2 மாதங்கள், என்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது இலக்கு’’ என்று தெரிவித்தார்.

Related Stories: