தேசிய உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை; ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: சேலம் பவித்ரா பேட்டி

சேலம்: இந்திய அளவிலான 60வது தேசிய தடகள போட்டிகள், தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்தது. தமிழக அணியில் போல்வால்ட் பிரிவில் இடம் பெற்றிருந்த சேலம் வீராங்கனை பவித்ரா, 3.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல், சேலம் வீரர் சக்திமகேந்திரன் 4.70 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். இவர்கள் இருவரும் நேற்று சேலம் வந்தனர். தமிழகத்திற்கு தங்கம் வென்று கொடுத்த பவித்ரா கூறுகையில், ”நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான், போல்வால்ட் விளையாட்டின் மூலமே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளேன்.

எனது தந்தை வெங்கடேஷ், கிரீல் பட்டறை வைத்துள்ளார். தனியார் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வரும் நான், கடந்த 9 ஆண்டுகளாக போல்வால்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இதுவரை தேசிய அளவிலான போட்டிகளில் 7 தங்கம் உள்பட 10 பதக்கத்தை வென்றுள்ளேன். தற்போது தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அளித்த ஊக்கத்தால், மூத்தோர் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறேன். அடுத்த ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல கடுமையான பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன்.

எனது இலக்கு, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் பெற்று கொடுக்க வேண்டும் என்பது தான். அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறேன். தமிழக அரசின் ஒத்துழைப்பால், அச்சாதனையை நான் நிச்சயம் செய்திடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார். வெண்கலப்பதக்கம் வென்ற சக்திமகேந்திரன் கூறுகையில், \”தேசிய தடகள போட்டியில் தமிழகத்திற்கு வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்திருக்கிறேன். அடுத்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை வென்று கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

Related Stories:

More
>