×

எங்கள் அணியின் பவுலர்களுக்கு இது மிக சிறப்பான நாள்: கேப்டன் மோர்கன் பேட்டி

அபுதாபி: ஐ.பி.எல் 14-வது சீசனின் 31-வது ஆட்டம் நேற்றிரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோஹ்லி, படிக்கல், டிவில்லியர்ஸ் என அனைவரும் மோசமான முறையில் ஆட்டமிழந்தனர். 19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

இதையடுத்து 93 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் இழப்பின்றி வெற்றியை நெருங்கிய நிலையில் ஷுப்மன் கில்  48 ரன் (34பந்து) எடுத்திருந்தபோது, சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கினார். ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 82 ரன்கள் குவித்தது.

வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘‘இந்த நாள் எங்களுக்கு மிகச் சரியான  துவக்கத்தை தந்துள்ளது. குறிப்பாக எங்கள் அணியின் பவுலர்களுக்கு இது மிகச் சிறப்பான நாள். மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி என தலைசிறந்த பேட்ஸ்மேன்களை எங்கள் பவுலர்கள், வீழ்த்தியிருக்கின்றனர். இது அரிதான மற்றும் அற்புதமான விஷயம்.

இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றே கூற வேண்டும். இதே போல் நாங்கள் தொடர்ந்து விளையாடினால், எந்த அணிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடுவோம் என்பதை உணர்த்தியிருக்கிறோம்’’ என்று தெரிவித்தார். பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘இந்த ஆடுகளத்தில் பேட்டிங்கில் நல்ல பார்ட்னர்ஷிப் அவசியம். அதிகாலை பனிப்பொழிவின் தாக்கம் ஆடுகளத்தில் இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. 40 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்து, அடுத்த 20 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளோம்.

அந்த சரிவில் இருந்து மீண்டு வருவது சிரமம். கொல்கத்தா பவுலர் வருண் சக்ரவர்த்தி, அற்புதமாக பந்து வீசினார். வருங்கால இந்திய அணியில் அவரும், அவரைப் போன்ற சிறந்த வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இப்போட்டியில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். இருப்பினும் இந்த அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம்’’ என்று தெரிவித்தார்.

Tags : Captain Morgan , This is a very special day for our team's bowlers: Interview with Captain Morgan
× RELATED ராஜஸ்தானை சுருட்டி வீசி பிளேஆப்...