மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் தந்து ஜவுளி வியாபாரி தற்கொலை முயற்சி: விருதுநகர் அருகே பரபரப்பு

ராஜபாளையம்: ஒத்தி பணத்தை திரும்ப தராததால் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஜவுளி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது சொக்கநாதன்புத்தூர் கிராமம். இங்குள்ள மேலூர் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (36). இவரது மனைவி தேவி (33). இவர்களது மகள்கள் குருதர்ஷினி (9), தேவதர்ஷினி (1). குமார் கேரளாவில் குடும்பத்துடன் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

கேரளாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கேயே ரூ.10 லட்சத்திற்கு வீடு ஒத்திக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஒத்தி முடிந்ததும் ரூ.10 லட்சத்தை கேட்டபோது வீட்டு உரிமையாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் சொந்த ஊரான சொக்கநாதன்புத்தூர் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் குமார் வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குமார், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பூச்சி மருந்துகளை கொடுத்து தானும் அருந்தியுள்ளார்.

மயங்கி கிடந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் இன்று அதிகாலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக 4 பேரும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜபாளையம் சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>