மேற்குவங்கத்தில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழை..சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த 14 ஆண்டுகள் இல்லாத அளவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தலைநகர் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான தாப்சியா, உல்டாதங்கா, பால்மர் பசார், ஜோத்பூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மட்டுமின்றி தண்டவாளத்தையும் மழைநீர் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கொல்கத்தாவில் இருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் கொல்கத்தாவில் 14.2 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் ஒரேநாளில் இந்த அளவு மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக, வெள்ள நீருக்கு மத்தியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல, பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். கழிவுநீர் செல்லும் பாதைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

More
>