பசுமை குடில், மலர் தோட்டம், அலங்கார நீரூற்று சூழியல் பூங்காவில் மனம் கவர்ந்த பண்ணை சுற்றுலா-கன்னியாகுமரிக்கு மேலும் ஓர் வரப்பிரசாதம்

இது நம்ம ஊரு...

கன்னியாகுமரி : பசுமை குடில், மலர் தோட்டம், அலங்கார நீரூற்று, எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று காட்சி தரும் மரங்கள், பூத்து குலுங்கும் மலர்கள், காய்த்து கனிந்த நிலையில் கனிகள் என கண்களுக்கு மட்டுமல்ல, மனதையும் மெல்லியதாக மாற்றுகிறது கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா. கடல் நடுவே உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் என கன்னியாகுமரிக்கு பெருமை சேர்க்கும் இவைகளுக்கு அடுத்த படியாக சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் தன்மையுடன் விளங்கி வருகிறது சுற்றுச்சூழல் பூங்கா. இயற்கையை அதன் வடிவிலேயே ரம்மியமாக ரசிக்கும் தன்மையை நமக்கு அளிக்கிறது சூழியல் பூங்கா.

கன்னியாகுமரியில் 1922-ம்ஆண்டு திருவிதாங்கூர் மூலம் திருநாள் மகாராஜாவால் 31.24 ஏக்கர் பரப்பளவில் பழத்தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. திருவிதாங்கூர் மகாராஜா கன்னியாகுமரிக்கு வரும்போது தங்கி ஓய்வெடுப்பதற்காகவும் சாப்பிடுவதற்கான பழங்கள் எடுப்பதற்காகவும் இந்த பழத்தோட்டம் அமைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசின் கீழ் 1953ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் அரசு தோட்டக்கலைப்பண்ணை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணை கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் பழத்தோட்டம் என்ற  இடத்தில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பழத்ேதாட்ட பண்ணைக்கும் வந்து சென்றனர்.

 இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேலும் ரசிக்கும் வகையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் பழத்தோட்டத்தில் மொத்தம் 31 ஏக்கர் பரப்பளவில் 15 ஏக்கர் பிரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஆய்வுகள் நடந்தன. இந்த ஆய்வுகள் முடிந்து ரூ.4 கோடியில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி கடந்த 2018ல் திறக்கப்பட்டது.  கன்னியாகுமரிக்கு வரும் 50 சதவீத பயணிகள் நிச்சயம் இந்த பூங்காவுக்கு  சென்று அழகை ரசிக்கிறார்கள். பூங்காவுக்குள் நுழைந்ததுமே நாம் வெளி உலகை முற்றிலும் மறக்க கூடிய அளவுக்கு இயற்கையின் அரவணைப்பு உள்ளது.

ஒளி விளக்குடன் கூடிய நீரூற்று, நீர் வீழ்ச்சி பூங்கா, வெண்சங்கு, சிறுவர் விளையாட்டு திடல்,  பனை பூங்கா, மூங்கில் தோட்டம், ஆர்க்கிட் பூங்கா, ஆந்தூரியம் பூங்கா, ஓய்வு திடல், திறந்தவெளி உணவகம், அகன்ற பசுமை  புல்ெவளி, சாக்லேட் உற்பத்தி கூடம், நீண்ட நடைபாதை என முற்றிலும் மாறுபட்ட உலகத்தை அடையாளம் காட்டுகிறது சூழியல் பூங்கா. வெறும் பூங்காவாக மட்டுமில்லாமல் பண்ணை சுற்றுலா திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முயல் பண்ணை, வாத்து பண்ணை, பசுமை குடில், கோழிப்பண்ணை, பசுமை பயிற்சி திடல், மாட்டு கொட்டகைகள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி கூடம், காளான் வளர்ப்பு குடில், காணி குடில் ஆகியவற்றை பார்க்கும் போது இயற்கையுடன் இயற்கையாக நாம் ஐக்கியமாகி விடுவோம்.

பண்ணை சுற்றுலா என்பது முழுக்க, முழுக்க மனதுக்கு இதமாக, கிராமத்து விவசாயத்தை  நம் கண்முன் நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த சூழியல் பூங்கா தற்போது சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து களை கட்ட தொடங்கி உள்ளது. இயற்கையை அதன் அழகிலேயே பார்த்து ரசிப்பது என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அப்படியொரு உணர்வை நமக்கு தரும் விதமாக சூழியல் பூங்கா அமைந்துள்ளது.

பண்ணை சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த தற்போது தோட்டக்கலைத்துறை சார்பில் ஆய்வுகள் தொடங்கி உள்ளன. பண்ணை சுற்றுலாவில் காலை முதல் மாலை வரை (குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி) பண்ணைகளுக்குள் இருந்து பொழுதை ரம்மியமாக களிக்கலாம். இந்த பூங்காவுக்கான நுழைவு கட்டணம் சிறுவர்களுக்கு 10ம், பெரியவர்களுக்கு ரூ.20ம் என உள்ளது. பண்ணை சுற்றுலா செல்ல சிறுவர்களுக்கு ரூ.25ம், பெரியவர்களுக்கு ரூ.50ம் என உள்ளது.

கன்னியாகுமரியில் சுற்றுலா திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் இடையே நடைப்பாலம் வர இருக்கிறது. இதற்காக பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்ய வந்த சுற்றுலாத்துறை அமைச்சர், சூழியல் பூங்கா மேம்பாடு தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.

பழத்தோட்டத்தில் 2 போக மாம்பழ சாகுபடி உள்ளது. இது தவிர பல்வேறு வகையிலான மரக்கன்றுகள் உள்ளன. இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பழக்கன்றுகள், ஒட்டுகள், பதியன்கள், அழகு செடிகள், நாற்றுகள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை பொருட்களால் உருவாக்கப்படும் சாக்லேட் போன்றவை பெரும் வரவேற்பை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு பஸ்சில் செல்பவர்கள் கூட பழத்தோட்டம் என இறங்கி சுற்றுச்சூழல் பூங்காவுக்கு செல்லலாம்.

உருவாகிறது ஆம்பி தியேட்டர்

 சுற்றுச்சூழல் பூங்காவில், பல்வேறு அம்சங்கள் உள்ள நிலையில் இங்கு ஆம்பி தியேட்டர் (திறந்தவெளி அரங்கு) அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா காரணமாக இதற்கான பணிகள் நடைபெற வில்லை. தற்போது புதிய அரசு பொறுப்பேற்று இருக்கும் நிலையில் ஆம்பி தியேட்டர் தொடர்பான வரைவு அறிக்கையை மீண்டும் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு, ஆம்பி தியேட்டர் அமைக்கப்பட்டால், இன்னும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான சூழியல் பூங்கா மாறும்.

Related Stories:

More
>