புதுவை எம்.பி.தேர்தலில் போட்டியிடப் போவது யார்?: என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இன்று வெளியாகிறது..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என்பது பற்றி என்.ஆர்.காங்கிரஸ் இன்று தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை பதவிக்கு ஒரே கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே அமைச்சரவையில் முக்கியத்துறை மற்றும் சபாநாயகர் பதவியை தன்வசப்படுத்திக்கொண்ட பாஜக, மாநிலங்களவை தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆதரவு கோரியும் அவர் இதுவரை தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் எம்.பி. பதவியையும் பாஜகவுக்கு விட்டு தர ரங்கசாமி விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனிடையே டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர்களை சந்தித்த அமைச்சர் நமசிவாயம் புதுச்சேரி திரும்பியுள்ளார். இதனால் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.

Related Stories: