×

அதிகாரிகள் எங்கள் செருப்பை தூக்கவே இருக்கிறார்கள்..சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் பாஜக மூத்த தலைவர் உமாபாரதி!!

போபால் : அதிகாரிகள் எங்கள் செருப்புகளை தூக்கவே இருக்கிறார்கள் என்ற சர்ச்சை கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் உமாபாரதி மன்னிப்பு கேட்டார். கடந்த சனிக்கிழமை போபாலில் தமது இல்லத்தில் பிற்படுத்தப்பட்டோர் மகாசபாவைச் சேர்ந்த குழுவினரை சந்தித்தார். அப்போது உமா பாரதியிடம் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் சாதிவாரி இடஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை அந்த குழுவினர் விடுத்தனர்.

அப்போது அவர்களிடையே உமா பாரதி இந்தி மொழியில் பேசிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அரசு அதிகாரிகள் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். அவர்கள் இருப்பதே எங்கள் செருப்புக்களைத் தூக்கத்தான். அரசியல்வாதிகளை அரசு அலுவலர்கள் கட்டுப்படுத்துவது எனச் சொல்வதெல்லாம் முட்டாள்தனமானது. முதலில் தனிப்பட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெறும். அதன் பின்னர்தான் அரசு அலுவலர்கள் அறிக்கையைத் தயார் செய்வார்கள்,என்றார். உமாபாரதியின் இந்த கருத்துக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் பணியாற்றும் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், உமா பாரதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், என்னை மன்னித்துவிடுங்கள். எனது நோக்கம் சரியாக இருந்தாலும், நான் பயன்படுத்திய வார்த்தைகள் சுய கட்டுப்பாட்டை மீறும் வகையிலேயே அமைந்திருந்தது. அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்களின்போது கூட இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நான் இன்று முதல் இந்த பாடம் கற்றுக்கொண்டேன் என்றார்.

Tags : Pajaka ,Umabharati , உமாபாரதி ,மன்னிப்பு,பாஜக
× RELATED அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து...