×

Quad உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார் : ஐ.நா கூட்டத்திலும் 25ம் தேதி உரையாற்றுகிறார்!!

புதுடெல்லி:அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐ.நா கூட்டம் மற்றும் ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதால் நாளை அமெரிக்கா புறப்படுகிறார் .இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ‘க்வாட்’(Quadrilateral Security Dialogue - Quad)  கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக உலகையே புரட்டிபோட்ட கொரோனா பரவல் தளர்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முதல்முறையாக வரும் 24ம் தேதி ‘க்வாட்’ தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.இக்கூட்டத்தில், ‘க்வாட்’ கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, கொரோனா தொற்று போன்ற பிரச்னைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றம், கட்டுப்பாடற்ற இந்தோ - பசிபிக் பிராந்தியம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கடந்த முறை காணொலி வழியாக நடைபெற்ற இந்தக் கூட்டம் இம்முறை நேரில் நடைபெறவுள்ளதால் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். முன்னதாக ஐ.நா. பொதுசபையின் 76வது அமர்வு கூட்டமானது, நியூயார்க் நகரில் வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அமர்வில் உயர்மட்ட பிரிவின் பொது விவாதத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி வரும் 25ம் தேதி ஐ.நா பொதுசபையில் உரையாற்ற உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 24ம் தேதி அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடைபெறும் ‘க்வாட்’ தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.மேலும் அதிபர் ஜோ பிடனை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி, 2 தரப்பு உறவுகள், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், ஆப்கனிஸ்தான் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளார்.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, ‘ஹவுடி, மோடி’ நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவருக்கு விருந்தளித்தார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இரண்டு நாள் பயணமாக பங்களாதேஷ் சென்ற பிரதமர் மோடி, இந்தாண்டின் இரண்டாவது வெளிநாட்டு பயணமாக அமெரிக்க செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,United States ,Quad Summit ,UN General Assembly , க்வாட்,அமெரிக்கா,பிரதமர் மோடி
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து