×

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள், தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவர்: பிரிட்டன் அறிவிப்பு

லண்டன் : பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற பிரிட்டன் அரசின் புதிய கட்டுப்பாடு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இருந்து வரும் பிரிட்டன் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது.இதன்படி 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் 3 கட்ட கொரோனா பரிசோதனை  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பாக முதல் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் பிரிட்டனுக்கு நுழைந்ததும் இந்திய பயணிகள் மேலும் 2 சோதனைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கும் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் புதிய சுகாதார கொள்கையின் படி, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஆஸ்ட்ரா ஜெனிகா, பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள். இதே போல ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான் , நியூசிலாந்து, கத்தார், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியன நாடுகளில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 4ம் தேதி இந்த கட்டுப்பாடுகள் பிரிட்டனில் அமல்படுத்தப்பட உள்ளன. பிரிட்டன் அரசின் இந்த திடீர் கட்டுப்பாட்டு விதிகளால் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Indians ,UK , பிரிட்டன் , இந்திய பயணிகள், தவணை ,தடுப்பூசி
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...