×

நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு 92 ரன்னில் சுருண்டது ஆர்சிபி

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 92 ரன்னில் சுருண்டது. ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து அவர் இன்னிங்சை தொடங்கினார். கோஹ்லி 5 ரன் மட்டுமே எடுத்து பிரசித் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேற, பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து தேவ்தத்துடன் ஸ்ரீகர் பாரத் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தனர். ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடிய தேவ்தத் 22 ரன் எடுத்து (20 பந்து, 3 பவுண்டரி) பெர்குசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிபட்டார். ஸ்ரீகர் 16 ரன் எடுத்து ரஸ்ஸல் பந்துவீச்சில் கில் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மேக்ஸ்வெல் (10 ரன்), வனிந்து ஹசரங்கா (0), சச்சின் பேபி (7 ரன்) ஆகியோர் வருண் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அணிவகுக்க, ஆர்சிபி அணி 66 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது.

கைல் ஜேமிசன் 4 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஹர்ஷல் படேல் 12, சிராஜ் 8 ரன்னில் வெளியேற, பெங்களூர் அணி 19 ஓவரில் 92 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. யஜ்வேந்திர சாஹல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 13 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரஸ்ஸல் தன் பங்குக்கு 3 ஓவரில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். லோக்கி பெர்குசன் 2, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 93 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.


Tags : Knight Riders ,RCB , Knight Riders bowled out RCB for 92 runs
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு