உள்நாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு ஊதிய உயர்வு: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டியும் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே ஒருநாள், சையத் முஷ்டாக் அலி  டி20 தொடர்கள் மட்டுமே தாமதமாக நடத்தப்பட்டன. மற்ற டிவிஷன் போட்டிகளும் கைவிடப்பட்டன. அதனால்  கிரிக்கெட்டை மட்டும் நம்பியிருக்கும் வீரர்கள் கடும் நிதிச்சுமைக்கு ஆளாகி உள்ளனர். பீகாரைச் சேர்ந்த வீரர், ஊதிய பாக்கியை வழங்கும்படி பிசிசிஐக்கு கடிதம் எழுதும் அவல நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று ‘ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களின் ஊதியம் உயர்த்தப்படும். கடந்த ஆண்டு இழப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக 50 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்’  என்று ட்வீட் செய்திருந்தார். அதன்படி ரஞ்சியில் 40 போட்டிகளுக்கு மேல் விளையாடிய  மூத்த வீரர்களுக்கு கூடுதலாக ரூ.60 ஆயிரம், 21-40 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடியவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 20 ஆட்டங்களுக்கு குறைவாக விளையாடியவர்களுக்கு ரூ.40ஆயிரம்,  யு23 வீரர்களுக்கு ரூ.25ஆயிரம், யு19 வீரர்களுக்கு ரூ.20ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். இவை தவிர ரஞ்சி கோப்பை , விஜய் ஹசாரே தொடர்களில்  ஆட்டம்  ஒன்றுக்கு ஊதியமாக தலா ரூ.35 ஆயிரம், முஷ்டாக் அலி தொடரில் ஆட்டம் ஒன்றுக்கு ரூ.17,500 கூடுதல் ஊதியமாக அளிக்கப்படும். வீராங்கனைகளுக்கான ஊதியம், ஒரு போட்டிக்கு ரூ.12,500லிருந்து ரூ.20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More