துணை முதல்வர்கள் சுக்ஜிந்தர்சிங், ஓ.பி.சோனியுடன் பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.  அவருடன் துணை முதல்வர்களாக சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓ.பி.சோனி ஆகியோர் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்றபின் சரண்ஜித் சிங் அளித்த பேட்டியில், ‘விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்’. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அடுத்த 5 மாதத்தில் அங்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் தேர்தல் வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதனால் அமரீந்தர் சிங் பதவி விலகினார். இதையடுத்து, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மாநில தொழில்துறை அமைச்சரான சரண்ஜித் சிங் சன்னி (58) புதிய முதல்வராக ஒருமனதாக நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று காலை நடந்தது. மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரண்ஜித் சிங்குடன், சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓ.பி.சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இவர்கள் இருவருமே அமரீந்தர் அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள்.

இவ்விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ஆகியோர் பங்கேற்று, முதல்வர் சரண்ஜித் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் விழாவில் பங்கேற்கவில்லை. பஞ்சாப்பில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்பது இதுவே முதல் முறை. அம்மாநிலத்தில் 32%க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தினர் உள்ளனர். வரும் தேர்தலில் பாஜ வென்றால் தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவோம் என கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இப்போதே தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங்கை முதல்வராக்கி, தலித்களின் வாக்குகளை மொத்தமாக வசப்படுத்தி உள்ளது.

முதல்வராக பதவியேற்றதும் பேட்டி அளித்த சரண்ஜித் சிங், ‘‘முதலில் கட்சி மேலிடத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் ஒரு புரட்சிகரமான தலைவர். இந்த அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசாக இருக்கும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாங்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இது வெளிப்படையான அரசாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாநிலத்தை வளம் பெறச் செய்வோம்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

* மோடி வாழ்த்து

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங்குக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். அவர் தனது பதிவில், ‘‘பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங்குக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மக்களின் நலனுக்காக பஞ்சாப் அரசுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’’ என கூறி உள்ளார்.

* ‘இது வெறும் தேர்தல் நாடகம்’

காங்கிரஸ் கட்சி, தலித் ஒருவரை முதல்வராக்கி இருப்பது வெறும் தேர்தல் நாடகம் என பாஜ, பகுஜன் சமாஜ் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், ‘‘தலித்கள் மீது காங்கிரசுக்கு இப்போது கூட நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் உட்பட பிற கட்சிகளுக்கு நெருக்கடி நிலை வந்தால் தலித்கள் தேவைப்படுகிறார்கள். காங்கிரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டில் தலித்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த தேர்தல் நாடகத்திற்கு தலித்கள் மயங்க மாட்டார்கள் என நம்புகிறேன்’’ என்றார். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரண்ஜித் சிங்கே முதல்வராக தொடர்வாரா என பஞ்சாப் மாநில பாஜ கேள்வி எழுப்பி உள்ளது.

* ‘மி டூ’ புகாரில் சிக்கியவரை

முதல்வராக்குவதா?

இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா விடுத்துள்ள அறிக்கையில், ‘கடந்த 2018ல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக ‘மி டூ’ புகாரில் சிக்கியவர் சரண்ஜித் சிங். அப்படிப்பட்டவர் முதல்வராக்கப்பட்டிருப்பது அவமானகரமானது. சரண்ஜித் சிங் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிக்கே நியாயம் மறுக்கப்படும் ஒரு மாநிலத்தில், சாமானிய பெண்களின் பாதுகாப்பை காங்கிரஸ் எப்படி உறுதி செய்யும். ஒரு பெண்ணாக இருந்தும், காங்கிரஸ் தலைவர் இந்த ‘மி டூ’ புகாரை கருத்தில் கொள்ளாமல் சரண்ஜித்தை முதல்வராக்கி உள்ளார்’ என கூறி உள்ளார்.

Related Stories:

More
>