மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் பாடத்திட்டம் மாற்றம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு பாடத்திட்டத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக  41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இம் மனுவானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மாணவர்கள் தரப்பு வாதத்தில், ‘‘கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் நிறைய மாற்றங்கள் இருந்தது. மேலும் அவை அனைத்தும் பொதுமருத்துவம் எடுத்துப் படித்த மாணவர்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் இப்படி மாற்றங்கள் மேற்கொண்டது பல தரப்பினரையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது’’ என தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவை பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>