கொடநாடு விவகாரத்தில் புதிய திருப்பம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு: கோத்தகிரி தாசில்தாரிடம் தனிப்படை மனு

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோத்தகிரி தாசில்தாரிடம் தனிப்படை போலீசார் மனு அளித்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இங்கு முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கோவையை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கனகராஜ் ஆத்தூரில் நடந்த விபத்தில் இறந்தார். சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி சோலூர்மட்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி சயான் கடந்த மாதம் 17ம் தேதி போலீசாரிடம் புதிய வாக்குமூலம் அளித்தார்.

இதைதொடர்ந்து, சாலை விபத்தில் மர்மமாக இறந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், மனைவி, மைத்துனர், அவரது நண்பர்கள் என பலரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளி ஜம்சீல் அலியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் என்பவர் அதே ஆண்டு ஜூலை 3ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே இவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினேஷ்குமார் சடலம் தூக்கில் தொங்கிய லுங்கி அவருடையது அல்ல என்று குடும்பத்தினர் கூறியதாக தகவல் வெளியானது. எனினும் இவ்வழக்கை தற்கொலை வழக்காகவே சோலூர்மட்டம் போலீசார் பதிவு செய்திருந்தனர்.

இப்போது கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் துவங்கியுள்ள நிலையில் தினேஷ்குமார் தற்கொலை குறித்து மீண்டும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமானால்  வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது.  எனவே தனிப்படை போலீசார் தினேஷ் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி கோத்தகிரி தாசில்தாரிடம் மனு

அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களில் தினேஷ் பெற்றோர், உறவினர்கள் மற்றும் எஸ்டேட் நிர்வாகிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து திருப்பங்களை ஏற்படுத்தி வரும் கொடநாடு கொலை வழக்கில், தினேஷ்குமார் மரணம் பற்றிய விசாரணையும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More